கோத்தாரி நினைவுகள் பகுதி 4

கோத்தாரி நினைவுகள் பகுதி 4

_உங்கள் திட்டத்திற்கான
மாபெறும் வரைபடம் தான் கனவு – கோல்ட் அடினார்_

  ஆம், கனவுகளின் ஆரம்ப இருப்போடு களமிறங்க தயார் படுத்திக்கொண்டோம்.   கோத்தாரியில் சேர்ந்த யாரும் பணக்கார குடும்பத்தை சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்பே இல்லை.

  செல்வந்தர்களுக்காக அப்போதே ஜேபிஆரும் ஏசி சண்முகமும் கடைகளை கட்டி கல்லா பார்த்திருந்தனர்.  இப்போது உள்ளது போல் பாலிடெக்னிக்கும் பொறியியல் கல்லூரிகளும் அப்போது மலிந்து கிடக்கவில்லை.

ஏழை வீட்டு பாயாசத்தில் எப்போதாவது எட்டிப்பார்க்கும் முந்திரி போல ஆங்கொன்றும் இங்கொன்றுமாக  நெடுஞ்சாலை ஓரமாக வேரடியில் பூத்த மலர்களாக பாலிடெக்குகள் முளைத்து கிடக்கும்.


வள்ளியம்மாளும், முருகப்பாவும், செங்கல்வராயனும் கோலேச்ச கோத்தாரி செம்பரம்பாக்கம் ஏரிக்கரையோரம் அமைதியாக இருந்தார்.


கோத்தாரி அரசு உதவிபெறும் கல்வி நிலையம் என்பதால் கட்டணம் எல்லோருக்கும் கட்டுபடியாகும் அளவிலேதான் இருந்தது.   ஏழை மற்றும் நடுத்தரக்குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வராமல் காவல் காத்திருந்த கடமை இந்த கல்வி நிலையத்திற்கு உண்டு.


  சில பேர் முதல் நாள் வகுப்புக்கு புதிய உடை வாங்கி அலமாரியில் வைத்திருந்தனர். அதில்  தம்முடைய வாழ்க்கை பயணத்தின் கனவை அந்த மொழுகி காவல் காத்தனர்.
எனக்கெல்லாம்  கல்லூரிக்கு முதல் நாள் தூக்கமே வரவில்லை.

  முதல் நாள் எப்படி இருக்குமோ? நண்பர்கள் கிடைப்பார்களா? எப்படி படிப்பது? எப்படி நடந்து கொள்வது? ஆசிரியர்கள் எப்படி இருப்பார்கள்? மனம் குழப்பத்தில் தவித்தது.


  போதாத குறைக்கு பம்மல், மீனாட்சி கிருஷ்ணன் பாலிடெக்னில் படித்த என் நண்பன் வேறு ஒரு திரைக்கதையை ஓட்டினான்.

“ டே மாப்ள.. எங்க சயின்ஸ் சாரு ஒரு கேள்விய கேப்பாரு..

 கேட்டு பதில் வரலைன்னு வச்சுக்க…..
 நிக்க வச்சு நாக்க புடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேப்பார்றா” என்றான்.

நான் அப்பாவியாக
 ”டேய்  அடிக்கமாட்டிரில்ல..? என்றேன்

”அடிச்சுட்டா கூட பரவாயில்லடா…

பொம்பள புள்ளைங்க முன்னாடி அசிங்க அசிங்கமா கேப்பார்ரா..
அதுக்கு நாலு அடிகூட வாங்கிக்கலாம்…”

இத பார்த்த Girls  எல்லாம்,
அதுங்க என்னமோ தாமஸ் ஆல்வா எடிசன் பொண்ணுங்க மாதிரி ’கெக்க பிக்க கெக்க பிக்கன்னு சிரிக்கும் மாப்ள..

 அவமானம் அவமானமா இருக்கும்டா” என்றான்.

அவன் சொன்ன விஷயம் சிரிப்பு வந்தாலும் ஒரு புதிய இடத்திற்கு போய் சங்கமிக்கும்  நடுக்கம் வரத்தான் செய்தது.
நாளை முதல் நாள் வகுப்பு.. என்ன நடக்கும் என்ற கேள்வி மனதை குடைந்தது. கடும் புயலில் பறந்து வந்து வேலியில் சிக்கிய பாலீத்தீன் பையாய் ’பட பட’ வென மனம் சல சலத்தது.

 அது ஒரு மாதிரியான மனநிலை மணப்பெண் புது வீட்டிற்கு போவது போல…

இருப்பதிலேயே சுமாரான சட்டையும் பேன்டையும் எடுத்து வைத்துவிட்டேன்.

   ஏற்கனவே கோத்தாரியில் மோகன வெங்கடேசன் என்ற எங்க ஊரு பையன் இரண்டாம் ஆண்டு படித்தான்.

"உன்ன யாராவது ரேக்கிங்க பண்ணா எங்கிட்ட சொல்லு…. இல்லைன்னா என்னோட பேர சொல்லு"ன்னு ரஜினி ஸ்டைலில் சொன்னான்.
அடப்பாவிங்களா… இதுல ரேக்கிங் வேறையா? கிழிஞ்சது போ..

வீட்டை விட்டு வெளியில் வந்தேன். அப்பா அதிகமாக ஒன்றும் சொல்லவில்லை.  "பசங்ககிட்ட பார்த்து பழகுடா"ன்னார் அவ்வளவுதான்.

அம்மா வலுக்காட்டயமாக விபூதி வைத்தாள்.  தெருமுனை திரும்புவதற்குள் துடைத்துவிட்டேன். (அப்பவே நான் அப்புடிதான்)  நாம  என்ன போருக்கா போறோம். …

 # சிவ. தினகரன் CMKT
… தொடரும்..

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments