கோத்தாரி நினைவுகள் பகுதி 6

கோத்தாரி நினைவுகள் பகுதி 6

கல்வி கரையில
கற்பவை நாள் சில - சங்க இலக்கியம்

பொருந்தாத Bag, புதிதான சட்டை, இழுத்துக்கட்டிய பெல்ட், நெற்றியில் விபூதி பொட்டு, புதிய செருப்பு, எண்ணெய் வடிந்த முகம்,   பேய் அறைந்தது போன்ற மிரட்சி இவையே புதிய சேர்க்கைக்கு வந்திருக்கும் மாணவர்களின் அடையாளம்.

பூவிருந்தவல்லியி்ல் இருந்து செம்பரம் பாக்கம் போவது தனியான நெடுந்தொடர் எழுதுவது போன்ற பெரிய நிகழ்வுதான் என்ற போதிலும் அது தனியாக வைத்துக்கொள்வோம்.

எப்படியோ வந்து சேர்ந்தோம் செம்மண் பூமி செம்பரம்பாக்கத்திற்கு.  முதலாம் ஆண்டு முதல் வகுப்புக்கு எங்களுக்கு முதன்மைக் கட்டிடத்தின் முதல் அறை ஒதுக்கப்பட்டது.

வகுப்பறைக்குள் நான்கு மின்விசிரிகள். அது சுற்றுவதால் காற்று வருகிறதா? இல்லை காற்றடிப்பதால் அது சுற்றுகிறதா? என்ற சந்தேகத்தோடு ஓடிக்கொண்டு இருந்தது.

வலது பக்கம் மடித்து வைத்து நோட்புக் கொண்டு எழுதும் வசதியுடன்,
தனித்தனி இருக்கைகள்.

 கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொள்ளலாம் என்ற போதிலும் முதல் வரிசையில் யாரும் உட்கார விருப்ப படவில்லை.

 இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைக்கு செம கிராக்கி.
உண்மையில் இந்த உளவியல் இந்தியர்களுக்கே இருக்கும் சொத்து. அவ்வளவும் இந்த பாழாய்ப் போன கூச்ச சுபாவம். கடைசி வரிசைக்கும் முதல் வரிசைக்கும் போட்டியும் ஓட்டமும் எடுக்கும் மனோபாவம்.

எங்கள் வகுப்பில் முதல் வரிசையை தவிர்க்கும் வாய்ப்பும் சலுகையும் பெண்களுக்கு வாய்க்கவில்லை. மொத்தம் எட்டு பேர் என நினைக்கிறேன். ஒன்னே முக்கா வரிசையை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பக்கத்திலிருந்து எந்த சத்தமும் வரவில்லை. "கீச் மாச்".

பெரிய பெரிய நட்புவட்டமோ, சிரிப்பொலியோ கலகலப்போ அப்போது தொடங்கவில்லை. ஒரே ஊரில் இருந்து வந்த இரண்டு மூன்று நண்பர்கள் மட்டும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து இருந்தனர்.

எல்லோருக்குமே தாம் ''நல்ல புள்ளை'' என காட்டிக்கொள்ளும் கடமை உணர்ச்சி இருந்தது.

 எப்படி வடிவேலு கைப்புள்ளையாக நடித்தாலும் அதைத்தாண்டி முகம் ஒரு கலக்கத்தில் உரைந்திருந்தது.

அது ஒரே கலக்கம்தான்...  அது ஆங்கிலம். ஆம் ஆங்கிலமேதான்.  ஏதோ தத்துபித்தென்று தமிழில் படித்து எப்படியோ உரு போட்டு பத்தாம் வகுப்பும் பண்ணிரெண்டாம் வகுப்பும் தாண்டிய எங்களுக்கு ஆங்கிலம் என்றால் ஒரு கொலை வெறி வந்துவிடும். இந்த பிரிட்டீஷ் காரர்களை நமக்கு பிடிக்காமல் போனதற்கு முழு  முதற்காரணம் அவர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள் என்பதை மீறி... அவர்கள் ஆங்கிலம் பேசினார்கள் என்பதாகவே இருக்கக் கூடும்.

கலக்கமும் பயமுமாக உட்கார்ந்திருந்தாலும் அருகில் இருக்கும் நண்பர்களுடன் கை குலுக்கிகொண்டோம்.

 அப்போதும் யாரையும் எதற்கும் எதிர்ப்பார்க்காமல் அரசமரமும் புங்க மரமும் காற்றில் சல சலத்து எங்களுக்கான காற்றை வாஞ்சனையின்றி வாரி வழங்கி வந்தது.

எங்களுக்கு எப்படி கோத்தாரியில் அட்மிட் ஆவது தயக்கமாக இருந்ததோ, அதைவிட தயக்கப்பட்டு தயக்கப்பட்டு மேலுதட்டின் மீது தயங்கி தயங்கி மீசை அட்மிட்டாகும் வயது அது.

பருவ வயது என்பது சரிதான். ஒன்று முகத்தில் 'பரு' இருக்கும் இல்லையன்னா மூக்குக்கு கீழே பூனை முடி போன்ற மீசை.

அந்த வயதுக்கே உரிய தேடலிலும் நாங்கள் இருந்தோம். எங்களை அறியாமல் கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் பெண்கள் பகுதியில் ரோந்து அடித்தது.

அந்த இனம் புரியாத குழப்பத்தின் நடுவே படைப்பரிவாங்களுக்கு இடையே தளபதி நுழைவது போல வந்தார் நம் நாயகன் '' சிவ சங்கரன்'' மாஸ்டர். ....


.....
..... தொடரும்.. # சிவ. தினகரன், 

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments