கோத்தாரி நினைவுகள் பகுதி 5

கோத்தாரி நினைவுகள்  பகுதி 5

 நம்பிக்கையோடு முதல் அடி எடுத்துவை
முழு படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை
முதல் படியில் ஏறு – மார்ட்டீன் லூதர் கிங்

 அன்று காலை சூரியனும் காலைப்பொழுதும் வீசிய காற்றும் புதுமையாக இருந்தது.  இல்லை இல்லை…புதுமையாக உணர்ந்தேன்.
 எனக்கென்னவோ அன்று  பேருந்து நிலையம்  ஈஸ்ட்மேன் கலரில் தெரிந்தது.

குன்றத்தூரில் இருந்து பூவிருந்தவல்லி சென்று செம்பரம்பாக்கம் செல்லவேண்டும்.
  பூவிருந்தவல்லிக்கு செல்ல  பல்லவன் (அப்போதெல்லாம் MTC பல்லவன்தான்) 66 வழித்தடத்தில் பயணிக்க  வேண்டும்.  பல்லவன் பேருந்தைப் பார்த்தால் கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கும்.

இங்கே பல்லவனைப் பற்றி சொல்லியாகவேண்டும்.  நாள்தோறும் சென்னை புழுதிக்காட்டில் நாளொன்றுக்கு 400 கிமீ குறையாமல் ஊர்ந்து ஊர்ந்து கடந்து பயணிகளை செய்கூலி சேதாரத்தோடு வீட்டிற்கும் அலுலவலகத்திற்கும்  அனுப்பி வைக்கும் நம் நகரவாசி நண்பன்.


 நம்முடைய 66 க்கு ஒரு சிறப்பு இருந்தது. தாம்பரம் மற்றும் பூவிருந்தவல்லி என்ற இரண்டுபக்கமும் உள்ள சென்னையின் நுழைவு வாயிலை இணைக்கும் பேருந்து அது. எப்போதும் கூட்டமாக போகும் ஒரே ஊர்நாட்டு வண்டி என்பதில் சந்தேகமில்லை.

அதுவும்  அது அறுபத்தாறே அல்ல, அறுவையாறு. ஆடி அசைந்து தேர் கணக்காக வரும்.


 வண்டி வந்ததும் ஏறி காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்தேன்.

 இரண்டாம் ஆண்டு மோகன வெங்கடேசன், மூன்றாம் ஆண்டு  சேஷகோபாலனிடம் என்னை அறிமுகம் செய்தான்.


“ அண்ணா, இவரு நியு அட்மிஷன், கோத்தாரியில இன்னைக்கு ஜாயின் பன்ன போறாரு” என்றான்.

அந்த அண்ணன் ஒரு பரிவோடு…
“ ஏம்பா சீனியர் வந்தா எழுந்து எடம் தறமாட்டியா? ரொம்பதான் நக்கலா உட்கார்ந்திருக்க.. அதுகூட வேணாம் ஒரு குட்மார்னிங்க கூட சொல்லமாட்டியா?”
என்றார் கடுப்போடு.


எனக்கொன்றும் புரியவில்லை.. ’நாம எதுக்கு எழுந்திரிச்சி எடம் தரனும், நாம எதுக்கு இவனுக்கு குட்மார்னிங் சொல்லனும்னு மனதுக்குள் நினைத்து குழம்பினேன்...

ஆனால் ஒன்று மட்டும் தெரிவாக புரிந்த்து…

”சனியன் சகலை … குன்றத்தூர்ல இருந்து மாங்காடு தாண்டுறத்துள்ளவே தோள் மேல ஏறிட்டான்”  என்று.  


என்னைப்போன்ற முகக்குறியுடன் கொஞ்சம் தடுமாற்றமாக சிக்கராயபுரத்தில் ஒரு First Year பலியாடு ஒன்று ஏறியது.

“எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல ஏறாத்தா ..”  என்கிற கதையாக சீனியர் சீமான்கள் அவனையும் பிடித்து ஒரு வாட்டு வாட்டினான்

  பூவிருந்தவல்லியில் (நல்ல தமிழ்ப்பெயரை பூந்தமல்லி என கொச்சையாக சொல்ல மனம் வரவில்லை, நண்பர்கள் பொருத்தருள்க) வந்த பிறகு செம்பரம்பாக்கம் போவது குறித்து ஒரு நெடுந்தொடரே எடுக்கலாம்.


  அந்த பேருந்து நிலையத்தில் பஸ் போன்ற சாமுத்திரிகா லட்சனத்தில் பாலசுப்பிரமணி மோட்டார்ஸ்  திருப்பெரும்புதூர் செல்ல தயாராக இருந்தது.


  செம்பரம்பாக்கத்திற்கு அதில் சென்றால்தான் செல்ல முடியும்.  மண்ணூர் வளர்புரம் வழியாக திருவள்ளூர் செல்லும்  T87 பேருந்தில் ஏறினால்  கல்வி நிலையம் சென்று சேருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றறிக.


  பாலசுப்பிரமணி பேருந்தில் பின் சீட்டு ஓரமாக பாலசுப்பிரமணி சார் உட்கார்ந்து இருந்தார். (ஆகா… என்ன பெயர் பொருத்தம்) மேலும் கோத்தாரி அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் முகங்கள் தெரிந்தன.


   கையில் டிராப்டர் உடன்  “மாமா, மச்சான்” என தைரியமாக பேசியவர்களும் Footboard  அடிக்க அணியமாக இருந்தவர்களும் சீனியர்கள்தான் என்று தெளிவாக புரிந்தது.

 அதில் ரெண்டு பேர் பான்பாராக் போட்டுக்கொண்டு  “புளிச்.. புளிச்…” என துப்பிக்கொண்டும் வந்தனர்.
  முதல் ஆண்டு சேர கனவுகளை மூட்டைக்கட்டிக்கொண்டு வந்த என்னைப்போன்ற பாக்கியவான்களை எப்படி அடையாளம் காண்பது.  அது ரொம்ப சுலபம். எப்படி?

 # சிவ. தினகரன். CMKTI

தொடரும்…

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments