பெரிய ’று’வா? சின்ன ’ரு’வா?
தகராறு க்கு எந்த று வரும் என நண்பர் கேட்டார்..
சின்னத் தகராறு எனில் சின்ன ’ரு’ –ம் பெரிய தகராறு எனில் பெரிய ’று’ ம் போட்டுக்கொள்ளுங்கள் என்றேன்.
இது பழைய நகைச்சுவை என்ற போதிலும் ஒவ்வொரு முறை ’தகராறு’ என எழுதும் போது ஒரு தகராறு வந்து விடுவதை மறுப்பதற்கில்லை.
தமிழில் பல சொற்களுக்கு சரியான எழுத்து எழுதுவதில் பலருக்கு தடுமாற்றம் ஏற்படுவதை கண்கூடாகவே தெரிகிறது.
இதற்காகவே தமிழில் எழுத அச்சப் படுவோரும் உண்டு. கணினியில் MS WORDல் ஆங்கிலத்தில் தட்டச்சும் போது வார்த்தைகளில் சொற்பிழை இருப்பின் சிவப்பில் அடிக்கோடு வரும். இது போலவே தமிழிலும் வந்தால் எப்படி இருக்கும்.
அது மட்டுமல்லாமல் தவறாரன சொற்களுக்கு சரியா சொற்தேர்வினை அளித்தால் மேலும் மகிழ்ச்சிதானே?

கனவு மெய்பட்டு விட்டது. ஆம் உங்களது கைபேசியில் உள்ள ஆன்ராய்டு மொபைலில் Play store சென்று MS word செயலியை நிறுவுங்கள். இது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியாகும்.

நிறுவிய பின்னர்க் கூடுதலாக மொழித் தேர்வில் தமிழ் மொழியை என நிறுவி கொள்ளுங்கள்.

தமிழ் வழியே உள்ளீடை தொடருங்கள். இப்போது எந்த செலவும் இல்லாமல் உங்கள் தகராறு விற்குத் தீர்வு கிடைத்துவிடும்.

தமிழில் சொல்திருத்தி என்பது நமது மொழியைப் பிழையின்றி எழுத ஒரு வாய்ப்புத்தானே… அதுமட்டுமல்ல, MS WORD கோப்பினை ஒன் டிரைவ், குகுள் டிரைவ் மற்றும் டிராப் பாக்ஸ் என சேமிக்க முடியும்.

நீங்கள் சேமித்த கோப்புகளை இணைய இணைப்புள்ள எந்த கணினியிலும் பார்க்க, தொகுக்க முடியும் என்பது கூடுதல் வசதி.

”தாய்மொழி தமிழால் முடியாதது ஏதுமில்லை, புறப்படுவோம் பயணம்” #  சென்னைத்தமிழன்

posted under | 0 Comments

நல்ல தமிழ்

ட, டு, டே, ண, ழ, ள என தொடங்கும் தமிழ் பெயர் சொல்லுங்கள் என்றார் நண்பர்.
அவ்வாறு தமிழ்ப்பெயர்கள் தொடங்காது என்றேன்.

அவர் அதை நம்பவில்லை. சோதிடர் என் குழந்தைக்கு அவ்வாறே பெயர்களை சூட்ட ஆணையிட்டார் என்றார்.

சோதிடருக்கு மட்டுமல்ல பண்பலை கேட்கும் நேயர்களுக்கும் இதுதான் தமிழ் என அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

"ஆய் எப்படி இருக்கீங்க என கேட்கும் மியுசிக் சானல் குறுந்தாடி முதல் "இன்னிக்கி யார லவ் பண்ணீங்க" என கேட்கும் ரேடியோ ஜாக்கிகள் வரையில் 24 மணிநேரமும் தமிங்கிலத்தில் ”கலாய்த்து”க் கொண்டு இருக்கிறார்கள்.

நல்ல தமிழை பேச வேண்டும் அதை யார் சொல்லித்தருவார்கள் என நினைப்பவர்களுக்கு இந்த செயலி நிச்சயமாக உதவும்….

தமிழ் இணையக்கல்வி கழகத்தின் ஆன்ட்ராய்டு செயலியில் பத்து பகுதிகளாக நல்ல தமிழை பேச பேராசியர். கவிக்கோ ஞானசெல்வம் வகுப்பெடுக்கிறார். ஒலிஒளிக் காட்சிகள் மிக எளிதாக தரவிரக்கம் ஆகிவிடும். ஒவ்வொரு காட்சிகளும் 30 மணித்துளிகள் ஓடக்கூடியவை.

திறன் கைபேசியில் பல உதவாக்கரை செயலிகளை பார்த்து நேரவிரயம் செய்து கொண்டு இருக்கிறோம். நம்முடைய தாய் மொழியை எப்படி உச்சரிக்க வேண்டும், எப்படி எழுத வேண்டும், இலக்கணம்தான் என்ன என்பதை கற்றுணர வேண்டாமா?

google play store சென்று Nalla Tamil என தட்டச்சுங்கள். இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள், நல்ல தமிழை, செந்தமிழை உச்சரிப்போம்… #  சென்னைத்தமிழன்

திரும்பத் திரும்ப பேசற நீ..... திரும்பத் திரும்ப....



திரும்பத் திரும்ப பேசற நீ….. திரும்பத் திரும்ப…

கூறியவை கூறல் குற்றம் என நன்னூல் சென்னதின் பிறகு அரைத்த மாவை அரைப்பது பெருங்குற்றமாகவே கருதப்படும். அதற்காகவே ’சொல்லுக சொல்லை பிரிதோர்ச்சொல்’ என்கிறார் வள்ளவ பெருந்தகை.

அதெல்லாம் சரி, காலையில் சாப்பிட்டதே கேள்விக்குறியாகி தொக்கி நிற்கும் போது எழுதிய சொல் எத்தனை முறை மீண்டு முட்டுகிறது என்கிற புள்ளி விவரத்தையெல்லாம் யார் சொல்ல முடியும். சண்டை சந்தடியில் யாராவது ’வார்த்தய அளந்து பேசு’ என்றால் அதுவும் சாத்தியமே என்கிறது ஒரு வலைப்பதிவு.

வலைப்பதிவாளர் நீச்சல்காரன் அதை சாத்தியமாக்கியும் இருக்கிறார். சுளகு என்ற மென்பொருளில் நாம் வடித்த கருத்துக் கோவை(?)யினை மொத்தமாக உள்ளீடு செய்யுங்கள்.

எந்த சொல் மீண்டும் மீண்டும் வருகிறது. எந்த எழுத்து எத்தனை இரட்டை வேடம் எடுக்கிறது என்பதை துள்ளியப் படுத்துகிறது இந்த எழுத்தாய்வுக் கருவி.

ஒரு கூடுதல் செய்தி....
மு.வ வின் திருக்குறள் உரையில் ‘என்று’ எனும் சொல்லும் கலைஞரின் உரையில் ”வேண்டும்” என்ற சொல்லினை அதிகம் பயன்படுத்தியுள்ளார்.

நமது எழுத்துகளை முறைப்படுத்த நீங்களும் இந்த வலைத்தளத்தில் முயன்றால் நலம் #

 சென்னைத்தமிழன்

இணையதள முகவரிhttp://dev.neechalkaran.com/p/sulaku.html#.VqXZipp97IU
Neechalkaran
Sulaku - சுளகு
A Tamil letter Analyzer தமிழ் எழுத்தாய்வுக் கருவி

எஸ்க்கியூஸ்மி உங்க கம்ப்யூட்டர்ல தமிழ் இருக்கா?





காலை விழித்தது முதல் இரவு உறக்கம் வரையில் கணினியின் பயன்பாடு இல்லாமல் நாள் கழிவதில்லை.

சர்வரோக நிவாரணியாக இருந்து வரும் கணினியில் நம்முடைய தாய் மொழி இல்லையெனில் அது நமக்கு அவமானமே.

ஆம். நாம் கணினியில் தமிழ் உள்ளீடு செய்வோம்.
ஒரு எளிய மென்பொருளை தரவிறக்கம் செய்வோம்.

Google தேடு பொறிக்கு சென்று NHM Writer என தட்டச்சுங்கள். அதற்கான வலைபக்கத்திற்கு சென்று அந்த மென்பொருளை தரவிரக்கம் செய்யுங்கள். சுமார் 1 எம்பி மட்டுமே கொள்ளவு உடைய சிறிய கோப்பு இது. சில நொடிகளில் வேலை முடிந்துவிடும்.

இப்போது மென்பொருளை, தமிழ் என தேர்வு செய்து நிறுவுங்கள். வலப்புறம் கீழே ஒரு மணி போன்றதொரு சின்னம் இருக்கும். அதனை சுட்டிக் கொண்டு இடப்புறம் சொடுக்கினால் 8 வழி முறைகள் கிடைக்கும்.

இப்போது தமிழ்99 என தேர்வு செய்யுங்கள்.
மணி இப்போது தங்க நிறமாக மாறும். தங்கம் வந்துவிட்டாலே தமிழ் வந்துவிட்டது என்றே அர்த்தம்.

மொழி மிகச்சிறந்த ஆயுதம். NHM writer அற்புதமான கருவி.
தாய் மொழி தமிழில் களமாடுங்கள் தோழர்களே…
எழுத்து தெய்வம்!
எழுதுகோலும் தெய்வம்! - பாரதி
எழுத்து தெய்வம் நம் கணினியில் குடி கொள்ளட்டும்

# சென்னைத்தமிழன்

தமிழ் எழுத்துணரி (OCR)

தொட்டல் பூ மலரும்!!!
தொடாமல் தமிழ் மலரும்!!!

ஒரு நூலில் முக்கிய குறிப்பொன்றை பார்க்கிறோம். அதனை மேற்கோள் காண்பிக்கவோ அல்லது பயன்படுத்தவோ முயற்சி செய்கிறீர்கள். . இப்போது அதை முழுமையாக நாம் தட்டச்சு செய்ய முற்படுகிறீர்கள். ஆனால் அப்படியெல்லாம் நீங்கள் மெனக் கெட வேண்டியதில்லை என்கிறது கணி தொழில் நுட்பம்.

OCR எனும் Optical charecter reader எழுத்துணரியின் பயன்பாடு இப்போது பதிப்புகில் வெகுவாக பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. அனைத்து எழுத்து வடிவங்களையும் உணர்ந்து அதை ஒருங்குறி எழுத்தாக (Unicode Font) மாற்றும் கருவி. இனி தமிழில் வெகு நாட்களாக நிலவி வந்த எழுத்துரு பிரச்சனை ஓரளவு முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாகவே இதனைக் கருதுகிறேன்.

இதனை எப்படி பயன் படுத்த வேண்டுமெனப் பார்ப்போம். . எந்தப் பகுதியை Text ஆக மாற்ற வேண்டுமோ அதனை உங்கள் கைப்பேசி கொண்டு நிழற்படமெடுங்கள். இப்போது இதனை கூகுள் டிரைவில் சேமித்து வையுங்கள். கோப்பினை pdf ஆகவோ அல்லது jpg கோப்பாகவோ சேமிக்கலாம் அது உங்கள் விருப்பம். 

உங்களின் கணினியில் கூகுள் டிரைவ் சென்று அக்கோப்பினை சுட்டி கொண்டு வலது க்ளிக் செய்யுங்கள். Open with … google doc என கோப்பினை திறந்தால் Image ஆக உள்ள எழுத்துகள் அனைத்தும் ஒருங்குறி எழுத்தாக மாறி இருப்பதைக் காணலாம். அதாவது படமும் உரைநடையும் உங்களுக்கு கிடைக்கும்.

இதனை நகலெடுத்து எல்லா விதமான தரவு உள்ளீட்டிற்கும் பயன்படுத்தலாம். பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்த பழைய ‘லை’ கூட இந்த எழுத்துணரி மாற்றித் தருகிறது என்பது வியப்பான செய்தி.

தமிழில் நல்ல எழுத்துணரி இல்லை என்ற நெருடல் நீண்ட நாட்களாகவே நமக்கு ஒரு குறையாக இருந்தது. அது இப்போது கூகுளின் முயற்சியால் நீங்கி இருப்பது. ஒரு உவப்பான செய்தி # சென்னைத்தமிழன்


தமிழில் குறுஞ்செய்தி அனுப்பத் தெரியுமா.....



உங்களுக்கு தமிழில் குறுஞ்செய்தி அனுப்பத் தெரியுமா?
பல பேருக்கு அனுப்ப விருப்பம். ஆனால் எப்படி தமிழ் விசைப்பலகை மொபைலில் நிறுவுவது. அதனை எப்படி தட்டச்சு செய்ய வேண்டும் என்ற கேள்வியும் தயக்கமும் நாம் நமது தாய் மொழியில் எண்ணங்களை பகிர முடியாமல் நம்மை முடக்கி வைக்கும்.
அப்படி தமிழில் செய்திகளை அனுப்ப வேண்டும் என்ற ஆவல் இருப்பவர்களுக்கு ஒரு எளிய வழி இருக்கிறது.

உங்களது ஆன்ராய்ட் மொபைலில் play store செல்லுங்கள். Google Handwriting input என தட்டச்சுங்கள். இப்போது இந்த செயலியை நிறுவுங்கள். இதில் language input ல் தமிழ் என தேர்வு செய்து முயற்சி செய்யுங்கள். 99 விழுக்காடு துல்லியமாக வேலை செய்கிறது. உங்கள் ஆள்காட்டி விரல் கொண்டு எழுத ஆரம்பியுங்கள். கோழி கிறுக்கல் கையெழுத்தைக் கூட அழகாக எழுத்துருவாக TEXT ஆக மாற்றுகிறது. இது ஒருங்குறி எழுத்தாக மாறுவதால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ, வாட்ஸ்ஆப் செய்தியோ தமிழில் தங்கு தடையின்றி பகிரலாம்….

தமிழ் எல்லா தொழில் நுட்பத்திற்கும் அணியமாகி வருகிறது. தாய்மொழி வேகத்திற்கு நாம் செல்லவில்லை எனில் வரலாறு ஒரு போதும் நம்மை மன்னிக்காது # சென்னைத்தமிழன்

Newer Posts Older Posts Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments