கெடைக்காது ஆனா கெடைக்கும்......

சாக அடிக்கிறவன் பேரு பொதுவா ‘எமன்’னுதான் சொல்லுவோம். ஆனா இப்போ எல்லாம் அதன் பேரு என்னமோ ‘என்டோ சல்பான்’னு சொல்றாங்க.. புது புது புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்ததுக்கப்புறம் புரியாத பேரோட தெரியாதவங்களை கொல்லற அன்னிய முதலீடுதான் ‘என்டோ சல்பான்’ பூச்சிக்கொல்லி மருந்து.

இது பூச்சிய மட்டும்தான் கொல்லும்னு வாங்கி பயர்களுக்கு அடிச்சாங்க... மத்திய அரசும், மாநில அரசும் சேர்த்து அடிச்சதுல விவசாயிங்கள மட்டுமில்லாம அய்யோ பாவம் அப்பாவி மக்களுக்கும் அரிச்சந்திரன் கோயிலுக்கு அனுப்பிட்டாங்க....

ஆமாங்க.....
கேரளாவில் காசர்கோடு, முழியார், பெல்லூர் பகுதியில 4700 ஏக்கர் நெலத்துல என்டோ சல்பான் பூச்சிக்கொல்லி தெளிச்சி விவசாயம் பன்னதுல ஏராளமான பேர வாய்கரிசி போட்டு எமன்கிட்ட அனுப்பினது நம்ம அரசுதான்.

இந்த பூச்சி மருந்து வேனா... வேனா.... விட்டுடுன்னு வடிவேலு கணக்கா நம்மாலுங்களும் கெஞ்சி கூத்தாடி பார்த்தாங்க.... ஆனா இந்த விவசாய அமைச்சர் சரத் பவார்- பார்த்தீபன் கணக்கா குண்டக்க மண்டக்க பேசி இந்த பூச்சிமருந்து வியாபாரத்த எல்லாம் நிறுத்தமுடியாது அப்புன்னு ஆப்பு வச்சுபுட்டார்.

1999லிருந்து ஹாலந்து, ஜெர்மனியில இருந்து எதிர்ப்பு கெளம்பி சூடு பிடிச்சி போராட்டமெல்லாம் நடந்துகிட்டு வருது. ஆசிய, மேற்காசிய 63 நாடுகள்ல இந்த என்டோ சல்பானுக்கு தடை விதிச்சி நிறுத்திட்டாங்க.... சுற்று சூழல் மாசு படுது... நெலமெல்லாம் விஷமாயிடுதுன்னு தட செய்ய சொல்லி மக்கள் போராடி வர்ராங்க....

ஆனா இந்த தொழிலதிபனுங்க தொல்ல தாங்க முடியாம யார் ஆட்டமும் செல்லுபடியாகாம என்டோ சல்பான் சக்கபோடு போடுது.

இயற்கை ஆர்வலர்களும், முற்போக்கு எண்ணம் கொண்டவங்களும் இதை எதிர்கிறாங்க. என்டோ சல்பானில் உள்ள கரிம குளோரின் சேர்மத்திற்கு பதில் கரிம பாஸ்பரஸ் சேர்ம பூச்சிக்கொள்ளி பயன்படுத்தலாம்னு ஆலோசணையும் சொல்றாங்க.....

கேப்பார் பேச்ச கேட்டா நாடு ஏன் கெடப்போவது. முட்டிகிட்டு அழுது மூலை பிதிங்கனதுதான் மிச்சம்.

தமிழக சத்த மன்றத்துல ச்சீ... சட்ட மன்றத்துல வேளாண் அமைச்சர் ‘இனிமேல தமிழநாட்டுல என்டோ சல்பான் வாங்கி விக்க மாட்டோம்னு சொன்னாரு..... அம்மா விசுவாசிங்க எல்லாம் டோபுல தொம்... தொம்முன்னு தட்டுனாங்க......

ஆனா எல்லா பூச்சி மருந்து கடையிலயும் இன்னமும் ‘என்டோ சல்பான்’ கெடைக்குது.....

டாஸ்மாக்கு குடிக்கிறவனுக்கு மட்டும்தான் சங்கு ஊதும்....
ஆனா
என்டோ சல்பான் குடியானவனுக்கு எல்லாருக்கும் சாவு மணி அடிக்கும்......

நாம இன்னும் சாகாம இருக்கறத்தால இத பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாதுன்னு சொல்லவந்தேன்.....
வேற வொன்னுமில்ல.... போராடுங்கப்பா.......


கபடமற்ற கர்நாடகர்கள்.....

 
       தமிழனுக்கு, பயிர் வாழவும் நீர் கிடையாது, உயிர் வாழவும் நீர் கிடையாது என அடாவடித்தனம் செய்யும் கர்நாடகர்களைப் பற்றியதல்ல இப்பதிவு. நீரை கொள்ளையடிப்பவர்களை பற்றிப்பேசி நேரத்தை வீணாக்காமல், மனதை கொள்ளையடிப்பவர்களை பற்றி பேசுவோம்.

           மனிதனாகட்டும் அல்லது மற்ற உயிரினமாகட்டும் இரம்யமான சூழலுக்கு மனதை கொள்ளைகொடுக்காத உயிரினமே இல்லை. அதுபோல்தான் இரம்யமான சூழலுக்காகவே தமிழகத்தின் கோவை மாவட்டம், ஆனைக்கட்டிக்கு படையெடுத்து வருகின்றன கர்நாடக பட்டாம்பூச்சிகள். வண்ண வண்ண கோலங்கள் அள்ளி தெளித்தாற்போல், பறக்கும் ஓவியமாக சுற்றி வருகின்றன.

பொதுவாக வண்ணத்துப்பூச்சிகள் காற்று வரும் திசைக்கு எதிராக பறந்து செல்லும் இயல்பு கொண்டவை. ஜுன், ஜூலையில் நீலகிரி மலைத்தொடர் பகுதியிலும் கர்நாடகப்பகுதியிலும் இருக்கும் இவை தென்மேற்கு திசையிருந்து வடகிழக்காக இடம்பெயர்கிறது. நீலகிரி மலைத்தொடர் பகுதிகளிலிருந்து வெள்ளியங்கிரி மலைப்பகுதிக்கு இன்ப சுற்றுலாவிற்கு கிளம்பிவிடுகின்றன.

இவை தமது வாழ்க்கையை முட்டை, புழு, கூட்டுப்புழு, முழுப்பூச்சிப்பருவம் என நான்கு வகை அவதாரமா எடுக்கின்றன.

        அக்டோபர் நவம்பர் மாத்தில் கோவை மாவட்டம் ஆனைகட்டிக்கு தேன்நிலவிற்காக வருகின்றது. வந்த இடத்தில் ஒரு காமக்களியாட்டமே நடக்கின்றது. பட்டாம் பூச்சிகள் சூரிய உதயத்திற்குப்பின்தான் பறக்க முற்படுகின்றன. அதற்கு முன்னதாக மரத்தின் மேலமர்ந்து சூரிய வெளிச்சத்தில் தன் சிறகுகளை உலர்த்தி சிறகடிக்க பக்குவப்படுத்திக்கொள்கின்றன. பெண் பூச்சிக்கு தேவையான சத்துள்ள தாவர உணவை ஆண்பூச்சி தேர்வு செய்து வழங்கி தமது இணையை வசியப்படுத்துகிறது. பெண் பூச்சியும் தமது தேவையறிந்து சேவகம் செய்யும் ஆணின் ஆசைக்கு உடன்படுகிறது. வந்த வேலையை சிந்தாமல் சிதறாமல் பக்குவமாய் முடிக்கின்றன. பெரும்பாலான ஆண் வண்ணத்துப்பூச்சிகள் புணர்ச்சிக்கு பின்பாக இறந்துவிடுகின்றன.

இவைகள் ஆனைகட்டியை பகுதியை ஏன் தேர்வு செய்கின்றது தெரியுமா?
ஊடல் கொள்ளத்தகுந்த புவியியல் தட்பவெப்பம்,
செரிவு மிகுந்த உணவு,
சூழலில் நிலவும் ஈரப்பதம்,
காற்றின் திசை இவையெல்லாம் அவற்றை தமிழகத்திற்குள் அழைத்துவரச்செய்கின்றன. கூட்டம் கூட்டமாக வகை, வகையாக லடசக்கணக்கில் சுற்றி மகிழ்கின்றன.

இவற்றில் முக்கிய வகைகளான admirals, fritillaries, Monarch, Zebra, painted ladies மற்றும் Sulphur குறிப்பிடும் படியானவையாகும். இதில் மொனார்ச் வகைவகையைச்சார்ந்தவை 4,000 கீ.மி. முதல் 4,800 கி.மீ வரை பறந்து செல்லும் திறன் பெற்றவை.


''ச்சீ என்னய்யா வாழக்கை  இது. பொழப்பு பாடாய் படுத்துதே,  
எதிர்நீச்சல் போடுறதே வாழ்க்கையா போயிடிச்சே.....

மனிதனாக பிறந்ததற்கு பறவையாகவோ, அல்லது பட்டாம்பூச்சியாக பிறந்திருக்க கூடாதா என அலுத்துக்கொள்ளும் மனிதர்களுக்கு ...

பூந்தோட்டமே தமது வாழ்க்கை எனச்சொல்லும் வண்ணத்துப்பூச்சி கூட 
காற்றின் திசைக்கு எதிராகப்பறக்கிறது. 
எதிர்நீச்சல் போட்டு போராட்ட உணர்வோடு வாழ்க்கை வாழ்பவனுக்குத்தான் இந்த பூந்தோட்ட வாழ்க்கை சொந்தம் எனும் உண்மையை மானுட குலத்திற்கு அவை விடுக்கும் செய்தியாக எடுத்துக்கொள்வோம்.

ஒவ்வோர் வண்ணத்துப்பூச்சியும் தமக்குள் பாடுவது எனக்கு நன்றாகவே கேட்கிறது.

' உலகம் பிறந்து எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக... '

- சென்னைத்தமிழன்

துப்பு கெட்ட பொழப்பு....

காட்சி 1.

ஓடும் பேருந்தில் சில்மிஷம் செய்யும் ஒரு வாலிபனை ஒரு பெண் ' த்தூ.. ஏன்டா நீயெல்லாம் மனுஷனாடா.. அக்கா தங்கச்சிக்கூட பொறக்கல... நீ நல்லா இருப்பியா... கட்டையில போக.. என அவன் முகத்தில் காரி முழிகிறாள்... பேருந்தில் உள்ள பயணிகள் எல்லோரும் அந்த இளைஞனை வெறுப்புணர்வோடு பார்க்கிறார்கள்...

காட்சி 2.

கிரிக்கெட் போட்டி ... ஜாகிர்கான் அந்த மினு மினுப்பான பந்தை, புளிச்.. புளிச் என்று துப்பி மேலும் பளபளக்க வைக்கிறார். ஓடிவந்து உற்சாகமாக வீசுகிறார்... ஆஸ்ரேலிய வீரர் ரிக்கி பான்டிங் மிடில் ஸ்டம்ப் எகிர்கிறது. ஸ்டேடியமே எழுந்து நின்று ஜாகிர்கானை கைத்தட்டி ஆர்பரிக்கிறது.

காட்சி 3

ஒரு திரைப்படம்... கார் வேகமாக போகிறது. ரஜினி ஸ்டைலாக தலையைக்கோதிவிட்டு, மென்றுகொண்டிருந்த அந்த பான்பராக் எச்சிலை ஜன்னல் வழியாக துப்பாமல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கார்கதவை திறந்து சாலையால் துப்புகிறார். ரஜினி ஸ்டைலில் புல்லரித்துப்போன இரசிகர் கூட்டத்தால் தியேட்டர் அதிர்கிறது.

மூன்றுக்கும் என்ன சம்மந்தம் என நீங்கள் கேட்கலாம். மேலே துப்பும் எல்லொருக்கும் வெகுஜன அங்கிகாரம் கிடைக்கிறது. உலகில் மானங்கெட்டவருக்காக காரி உமிழும் பழக்கம் இல்லை. மாறாக அபராதம் கட்டவேண்டும்.

நின்று கொண்டிருக்கும் ஒரு பேருந்தின் ஓரமாக நடந்து செல்ல இஷ்ட தெய்வத்தின் அருளோ அல்லது குறைத்தபட்சம் ஒரு குடையோ உங்களுக்கு தேவைப்படலாம். தமது வீட்டைத்தவிர பொது இடத்தை கழிப்பிடமாக உபயோகிக்கும் மனோபாவம் நம்மிடையே வளர்ந்துவருகிறது. இது எவ்வளவு அருவேறுப்பானது என நீங்கள் உணரவேண்டுமானால் செருப்பில்லாமல் ஒரு நாள் மட்டும் தெருவில் நடந்து பாருங்கள் தெரியும்.


கடற்பகுதியில் சர்வ தேச எல்லையில் எச்சில் துப்புவர்களுக்கு ரூ.500 வரை, தண்டம் விதிக்கப்படுகிறது. சென்னை மாநராட்சி கூட பொது இடத்தில் துப்புவர்களுக்கு ரூ. 100 தண்டம் விதித்துள்ளது. (வசூல் செய்திருந்தால் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசிடம் கையேந்தும் சூழல் வந்திருக்காது). தமிழக அரசு பான்பராக், புகையிலை, பான் பீடா ஆகியவற்றிக்கு தடை விதித்துள்ளது. (ஆமாங்க உண்மைதான், சத்தியமா நம்புங்க..) ரூ.3க்கு விலையிடப்பட்ட பாக்கட்டுகள் உள்ளூர் வரி (போலிஸ் மாமுல்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன்) 6 ரூபாய்க்கு அரசு அங்கிகாரம் பெற்ற, பெறாத அனைத்துக்கடைகளிலும கிடைக்கிறது. கொடுமைகண்டால் கொதித்து சிவப்பாக வேண்டிய சமூகம் பான்பராக் எச்சிலால் சிவந்து கிடக்கிறது.

ஆந்திர மாநிலம் பான் பொருட்களுக்கு தடையேதும் விதிக்கவில்லை. ஆனால் நக்சல் இயக்கம் வேரூன்றியிருக்கும் இடங்களில் பான் பொருட்கள் கடைகளில் கிடைப்பதில்லை. அதிசயம்தான். ஆனால் அக்மார்க் உண்மை. நக்சல் இயக்கங்கள் அங்கே பான் பொருட்களுக்கு தடை விதித்துள்ளன. அரசின் சட்டத்திற்கு கட்டுப்பட மறுப்பவர்கள் நக்சலுக்கு அடங்குகிறார்கள்.

எச்சிலை காலை உணவாக் எடுத்துக்கொள்ளும் ஈ, அதி நவீன நோயின் தீவிர கொள்கை பரப்பு செயலாளராக மாறி காலரா, காசநோய், சிக்குன் குனியா, மலேரியா ஆகியவற்றை எளிதாக பரப்புகிறது. மனித குலத்தின் தவறான செயலால் மனித குலம் அழகிறது.

எச்சில் இலை, எச்சில் உணவு, எச்சில் பையன் என்ற சொல் மூலம் எச்சிலுக்கு இரண்டாம் தரமான இடம்தான் தரப்படுகிறது. உண்மை என்னவேன்றால்... செயற்கை இரத்தம், செயற்கை மணல், செயற்கை இதயம், செயற்கை உறம் என புகுந்து விளையாடும் டெக்னாலஜி உலகம் திகைத்து நிற்பது செயற்கை எச்சில் எப்படி செய்வது என்பது குறித்துதான்.

ஆம், எச்சில் யாராலும் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாத அரிய பொருகள். சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னிசியம், குளோரைடு, பைகார்பனேட், பாஸ்பேட் என கனிமச்சுரங்களின் அதிசயக்கலவை. அதில் உள்ள 'லிப்பேஸ்' செரிமானத்திற்கு உதவுகிறது. நாளொன்றுக்கு 1 முதல் 2 லிட்டர் வரை எச்சில் எனப்படும் உமிழ்நீர் வாயில் சுரக்கிறது. எச்சில், உணவுபொருளில் உள்ள நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது. ஆற்றல் மிகுந்த பேச்சாற்றல்கூட எச்சிலால்தான் ஏற்ற இறக்கத்தோடு அமைகிறது என்பது மற்றோர் சிறப்புச்செய்தி. அப்படிபட்ட செயற்கரிய பொருளைத்தான் வெளியில் துப்புகிறோம். வெட்கப்படவேண்டிய, வேதனைப்பட வேண்டிய விஷயம்.

இன்று அழுது வீங்கி நாளை சாகப்போகிற சமூகத்திடம், அடுத்து வரப்போகிற தலைமுறை எனக்கு என்ன விட்டுசெலகிறீர்கள் என கேள்விகேட்கும் நிலை வரும். அப்போது மாசுபடாத பூமி என்ற பதில் இல்லையென்றால் அவர்களும் நம்மை நோக்கி காரி உமிழும் நிலை வரலாம்.

எதை தவிற்க போகிறீர்கள்? துப்பும் பழக்கத்தையா? அடுத்த தலைமுறை கேள்விகளையா?

- சென்னைத்தமிழன்.

இலக்கியத்தில் காதலுக்கு மரியாதை

காதலை சொல்வதில் சங்க இலக்கியத்திற்கு நிகராக ஏதுமில்லை. நற்றிணையும், குறுந்தொகையும் சங்ககால சூழுலுக்கு சென்று இரசிக்க நல்ல தமிழ்  வாத்தியார் அமைவது ஒரு கொடுப்பினை. இப்போது திரைப்பாடல்கள் காதலை பாடாமல் காமத்தை பாடுகிறது. ஆனால் சங்க காலத்தில் அப்படியில்லை.  காதல், வீரம், காமம், சூழல், அறம் ஆகியவை உள்ளார்ந்த பொருளோடு நம்மை வியக்க வைக்கின்றன.

நற்றிணையில் ஓர் பாடல். என்னமாய் எழுதியிருக்கிறார் பாருங்கள்......

அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்;
நுமர் வரின், மறைகுவென்-மாஅயோளே!

காதலுனும் காதலியும் அவரவர் வீட்டிற்கு தெரியாமல் காட்டு வழியே இடம் பெயர்கின்றனர். அப்போது ஓர் மறைவிடத்தில் தூரத்தில் சத்தம் கேட்கிறது. அப்போது காதலன் காதலியிடத்தில் கூறுகிறான்...

பகைவர்- எதிரி யாராவது வருவார் எனில் அவர்களை தகர்த்தெரிவேன்.
வருவது உன் உறவினர் எனில் மரத்திடையே ஒளிந்து கொள்வேன்.
நயமான வரிகள் நல்ல காதல்.

இப்போதைய காதல் பகைவர் இடத்தில் அன்பு பாராட்டுவதும்,
உறவினர் இடத்தில் பகைகொள்வதுமாக அமைகிறது.
இலக்கியம் மொழியை மட்டுமல்ல....

மனிதத்தையும் பாராட்டுகிறது.
- சென்னைத்தமிழன்

posted under | 2 Comments

ஆத்தா நான் பாசாயிட்டேன்


        பத்தாங்கிளாஸ் படிச்சப்ப மொட்டமாடியில சைன்தீட்டா, காஸ்தீட்டான்னு மனப்பாடம் செஞ்சி படிச்சேன். கணக்குப்பாடத்துல மொத மார்க்கும் எடுத்தேன். 20 வருசம் ஓடிப்போச்சி. ஆனா வாழ்க்கையில உனக்கு திரிகோணமிதி தெரிஞ்சாதான் சோறுன்னு ஒருத்தனும் இதுவரைக்கும் சொன்னதில்லை.

குவியாடியின் குவியதூரம்…

டாப்ளர் விளைவு,

நியுட்டனின் மூன்றாம் விதி..

பாஸ்கல்லின் விதி..

பிளமிங்கின் வலக்கை விதி….

எது படிச்சும் விதி விட்ட வழியில நம்ம வாழ்க்கை ஓடிக்கிட்டருக்கு.

ஸ்கூல் படிக்கும்போது மக்கு பய சுகுமாரை வாசலுக்கு வெளிய நிக்க வைப்பார் எங்க கணக்கு வாத்தியார்.

ஆனா இப்ப எங்க ஊருல சுகுமாருதான் பெரிய ஆளு. அந்த கணக்கு வாத்தியார் தன் மகனுக்கு வேளை விஷயமா பயோடேட்டாவோட சுகுமாரு வீட்டு வாசல்ல நின்னத பார்த்தப்பதான் எனக்கு ஒன்னு ஒரச்சது.

பத்தாங்கிளால் பெயில் ஆனாவந்தான் பத்துபேருக்கு வேல கொடுக்கிறான். பர்ஸ்ட் கிளாஸ்ல பாசானவன் எல்லாம் பல்ல இளிச்சிக்கின்னு மாசகூலிக்கு மாரடிக்கிறான்.

பாடத்த சொல்லித்தர பள்ளிக்கூடம்
வாழ்க்கைய சொல்லித்தந்தா எவ்வளவு நல்லா இருக்கும்…..

Newer Posts Older Posts Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments