கோத்தாரி நினைவுகள் பகுதி 6

கோத்தாரி நினைவுகள் பகுதி 6

கல்வி கரையில
கற்பவை நாள் சில - சங்க இலக்கியம்

பொருந்தாத Bag, புதிதான சட்டை, இழுத்துக்கட்டிய பெல்ட், நெற்றியில் விபூதி பொட்டு, புதிய செருப்பு, எண்ணெய் வடிந்த முகம்,   பேய் அறைந்தது போன்ற மிரட்சி இவையே புதிய சேர்க்கைக்கு வந்திருக்கும் மாணவர்களின் அடையாளம்.

பூவிருந்தவல்லியி்ல் இருந்து செம்பரம் பாக்கம் போவது தனியான நெடுந்தொடர் எழுதுவது போன்ற பெரிய நிகழ்வுதான் என்ற போதிலும் அது தனியாக வைத்துக்கொள்வோம்.

எப்படியோ வந்து சேர்ந்தோம் செம்மண் பூமி செம்பரம்பாக்கத்திற்கு.  முதலாம் ஆண்டு முதல் வகுப்புக்கு எங்களுக்கு முதன்மைக் கட்டிடத்தின் முதல் அறை ஒதுக்கப்பட்டது.

வகுப்பறைக்குள் நான்கு மின்விசிரிகள். அது சுற்றுவதால் காற்று வருகிறதா? இல்லை காற்றடிப்பதால் அது சுற்றுகிறதா? என்ற சந்தேகத்தோடு ஓடிக்கொண்டு இருந்தது.

வலது பக்கம் மடித்து வைத்து நோட்புக் கொண்டு எழுதும் வசதியுடன்,
தனித்தனி இருக்கைகள்.

 கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொள்ளலாம் என்ற போதிலும் முதல் வரிசையில் யாரும் உட்கார விருப்ப படவில்லை.

 இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைக்கு செம கிராக்கி.
உண்மையில் இந்த உளவியல் இந்தியர்களுக்கே இருக்கும் சொத்து. அவ்வளவும் இந்த பாழாய்ப் போன கூச்ச சுபாவம். கடைசி வரிசைக்கும் முதல் வரிசைக்கும் போட்டியும் ஓட்டமும் எடுக்கும் மனோபாவம்.

எங்கள் வகுப்பில் முதல் வரிசையை தவிர்க்கும் வாய்ப்பும் சலுகையும் பெண்களுக்கு வாய்க்கவில்லை. மொத்தம் எட்டு பேர் என நினைக்கிறேன். ஒன்னே முக்கா வரிசையை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பக்கத்திலிருந்து எந்த சத்தமும் வரவில்லை. "கீச் மாச்".

பெரிய பெரிய நட்புவட்டமோ, சிரிப்பொலியோ கலகலப்போ அப்போது தொடங்கவில்லை. ஒரே ஊரில் இருந்து வந்த இரண்டு மூன்று நண்பர்கள் மட்டும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து இருந்தனர்.

எல்லோருக்குமே தாம் ''நல்ல புள்ளை'' என காட்டிக்கொள்ளும் கடமை உணர்ச்சி இருந்தது.

 எப்படி வடிவேலு கைப்புள்ளையாக நடித்தாலும் அதைத்தாண்டி முகம் ஒரு கலக்கத்தில் உரைந்திருந்தது.

அது ஒரே கலக்கம்தான்...  அது ஆங்கிலம். ஆம் ஆங்கிலமேதான்.  ஏதோ தத்துபித்தென்று தமிழில் படித்து எப்படியோ உரு போட்டு பத்தாம் வகுப்பும் பண்ணிரெண்டாம் வகுப்பும் தாண்டிய எங்களுக்கு ஆங்கிலம் என்றால் ஒரு கொலை வெறி வந்துவிடும். இந்த பிரிட்டீஷ் காரர்களை நமக்கு பிடிக்காமல் போனதற்கு முழு  முதற்காரணம் அவர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள் என்பதை மீறி... அவர்கள் ஆங்கிலம் பேசினார்கள் என்பதாகவே இருக்கக் கூடும்.

கலக்கமும் பயமுமாக உட்கார்ந்திருந்தாலும் அருகில் இருக்கும் நண்பர்களுடன் கை குலுக்கிகொண்டோம்.

 அப்போதும் யாரையும் எதற்கும் எதிர்ப்பார்க்காமல் அரசமரமும் புங்க மரமும் காற்றில் சல சலத்து எங்களுக்கான காற்றை வாஞ்சனையின்றி வாரி வழங்கி வந்தது.

எங்களுக்கு எப்படி கோத்தாரியில் அட்மிட் ஆவது தயக்கமாக இருந்ததோ, அதைவிட தயக்கப்பட்டு தயக்கப்பட்டு மேலுதட்டின் மீது தயங்கி தயங்கி மீசை அட்மிட்டாகும் வயது அது.

பருவ வயது என்பது சரிதான். ஒன்று முகத்தில் 'பரு' இருக்கும் இல்லையன்னா மூக்குக்கு கீழே பூனை முடி போன்ற மீசை.

அந்த வயதுக்கே உரிய தேடலிலும் நாங்கள் இருந்தோம். எங்களை அறியாமல் கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் பெண்கள் பகுதியில் ரோந்து அடித்தது.

அந்த இனம் புரியாத குழப்பத்தின் நடுவே படைப்பரிவாங்களுக்கு இடையே தளபதி நுழைவது போல வந்தார் நம் நாயகன் '' சிவ சங்கரன்'' மாஸ்டர். ....


.....
..... தொடரும்.. # சிவ. தினகரன், 

கோத்தாரி நினைவுகள் பகுதி 5

கோத்தாரி நினைவுகள்  பகுதி 5

 நம்பிக்கையோடு முதல் அடி எடுத்துவை
முழு படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை
முதல் படியில் ஏறு – மார்ட்டீன் லூதர் கிங்

 அன்று காலை சூரியனும் காலைப்பொழுதும் வீசிய காற்றும் புதுமையாக இருந்தது.  இல்லை இல்லை…புதுமையாக உணர்ந்தேன்.
 எனக்கென்னவோ அன்று  பேருந்து நிலையம்  ஈஸ்ட்மேன் கலரில் தெரிந்தது.

குன்றத்தூரில் இருந்து பூவிருந்தவல்லி சென்று செம்பரம்பாக்கம் செல்லவேண்டும்.
  பூவிருந்தவல்லிக்கு செல்ல  பல்லவன் (அப்போதெல்லாம் MTC பல்லவன்தான்) 66 வழித்தடத்தில் பயணிக்க  வேண்டும்.  பல்லவன் பேருந்தைப் பார்த்தால் கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கும்.

இங்கே பல்லவனைப் பற்றி சொல்லியாகவேண்டும்.  நாள்தோறும் சென்னை புழுதிக்காட்டில் நாளொன்றுக்கு 400 கிமீ குறையாமல் ஊர்ந்து ஊர்ந்து கடந்து பயணிகளை செய்கூலி சேதாரத்தோடு வீட்டிற்கும் அலுலவலகத்திற்கும்  அனுப்பி வைக்கும் நம் நகரவாசி நண்பன்.


 நம்முடைய 66 க்கு ஒரு சிறப்பு இருந்தது. தாம்பரம் மற்றும் பூவிருந்தவல்லி என்ற இரண்டுபக்கமும் உள்ள சென்னையின் நுழைவு வாயிலை இணைக்கும் பேருந்து அது. எப்போதும் கூட்டமாக போகும் ஒரே ஊர்நாட்டு வண்டி என்பதில் சந்தேகமில்லை.

அதுவும்  அது அறுபத்தாறே அல்ல, அறுவையாறு. ஆடி அசைந்து தேர் கணக்காக வரும்.


 வண்டி வந்ததும் ஏறி காலியாக இருந்த சீட்டில் உட்கார்ந்தேன்.

 இரண்டாம் ஆண்டு மோகன வெங்கடேசன், மூன்றாம் ஆண்டு  சேஷகோபாலனிடம் என்னை அறிமுகம் செய்தான்.


“ அண்ணா, இவரு நியு அட்மிஷன், கோத்தாரியில இன்னைக்கு ஜாயின் பன்ன போறாரு” என்றான்.

அந்த அண்ணன் ஒரு பரிவோடு…
“ ஏம்பா சீனியர் வந்தா எழுந்து எடம் தறமாட்டியா? ரொம்பதான் நக்கலா உட்கார்ந்திருக்க.. அதுகூட வேணாம் ஒரு குட்மார்னிங்க கூட சொல்லமாட்டியா?”
என்றார் கடுப்போடு.


எனக்கொன்றும் புரியவில்லை.. ’நாம எதுக்கு எழுந்திரிச்சி எடம் தரனும், நாம எதுக்கு இவனுக்கு குட்மார்னிங் சொல்லனும்னு மனதுக்குள் நினைத்து குழம்பினேன்...

ஆனால் ஒன்று மட்டும் தெரிவாக புரிந்த்து…

”சனியன் சகலை … குன்றத்தூர்ல இருந்து மாங்காடு தாண்டுறத்துள்ளவே தோள் மேல ஏறிட்டான்”  என்று.  


என்னைப்போன்ற முகக்குறியுடன் கொஞ்சம் தடுமாற்றமாக சிக்கராயபுரத்தில் ஒரு First Year பலியாடு ஒன்று ஏறியது.

“எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல ஏறாத்தா ..”  என்கிற கதையாக சீனியர் சீமான்கள் அவனையும் பிடித்து ஒரு வாட்டு வாட்டினான்

  பூவிருந்தவல்லியில் (நல்ல தமிழ்ப்பெயரை பூந்தமல்லி என கொச்சையாக சொல்ல மனம் வரவில்லை, நண்பர்கள் பொருத்தருள்க) வந்த பிறகு செம்பரம்பாக்கம் போவது குறித்து ஒரு நெடுந்தொடரே எடுக்கலாம்.


  அந்த பேருந்து நிலையத்தில் பஸ் போன்ற சாமுத்திரிகா லட்சனத்தில் பாலசுப்பிரமணி மோட்டார்ஸ்  திருப்பெரும்புதூர் செல்ல தயாராக இருந்தது.


  செம்பரம்பாக்கத்திற்கு அதில் சென்றால்தான் செல்ல முடியும்.  மண்ணூர் வளர்புரம் வழியாக திருவள்ளூர் செல்லும்  T87 பேருந்தில் ஏறினால்  கல்வி நிலையம் சென்று சேருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றறிக.


  பாலசுப்பிரமணி பேருந்தில் பின் சீட்டு ஓரமாக பாலசுப்பிரமணி சார் உட்கார்ந்து இருந்தார். (ஆகா… என்ன பெயர் பொருத்தம்) மேலும் கோத்தாரி அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் முகங்கள் தெரிந்தன.


   கையில் டிராப்டர் உடன்  “மாமா, மச்சான்” என தைரியமாக பேசியவர்களும் Footboard  அடிக்க அணியமாக இருந்தவர்களும் சீனியர்கள்தான் என்று தெளிவாக புரிந்தது.

 அதில் ரெண்டு பேர் பான்பாராக் போட்டுக்கொண்டு  “புளிச்.. புளிச்…” என துப்பிக்கொண்டும் வந்தனர்.
  முதல் ஆண்டு சேர கனவுகளை மூட்டைக்கட்டிக்கொண்டு வந்த என்னைப்போன்ற பாக்கியவான்களை எப்படி அடையாளம் காண்பது.  அது ரொம்ப சுலபம். எப்படி?

 # சிவ. தினகரன். CMKTI

தொடரும்…

கோத்தாரி நினைவுகள் பகுதி 4

கோத்தாரி நினைவுகள் பகுதி 4

_உங்கள் திட்டத்திற்கான
மாபெறும் வரைபடம் தான் கனவு – கோல்ட் அடினார்_

  ஆம், கனவுகளின் ஆரம்ப இருப்போடு களமிறங்க தயார் படுத்திக்கொண்டோம்.   கோத்தாரியில் சேர்ந்த யாரும் பணக்கார குடும்பத்தை சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்பே இல்லை.

  செல்வந்தர்களுக்காக அப்போதே ஜேபிஆரும் ஏசி சண்முகமும் கடைகளை கட்டி கல்லா பார்த்திருந்தனர்.  இப்போது உள்ளது போல் பாலிடெக்னிக்கும் பொறியியல் கல்லூரிகளும் அப்போது மலிந்து கிடக்கவில்லை.

ஏழை வீட்டு பாயாசத்தில் எப்போதாவது எட்டிப்பார்க்கும் முந்திரி போல ஆங்கொன்றும் இங்கொன்றுமாக  நெடுஞ்சாலை ஓரமாக வேரடியில் பூத்த மலர்களாக பாலிடெக்குகள் முளைத்து கிடக்கும்.


வள்ளியம்மாளும், முருகப்பாவும், செங்கல்வராயனும் கோலேச்ச கோத்தாரி செம்பரம்பாக்கம் ஏரிக்கரையோரம் அமைதியாக இருந்தார்.


கோத்தாரி அரசு உதவிபெறும் கல்வி நிலையம் என்பதால் கட்டணம் எல்லோருக்கும் கட்டுபடியாகும் அளவிலேதான் இருந்தது.   ஏழை மற்றும் நடுத்தரக்குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வராமல் காவல் காத்திருந்த கடமை இந்த கல்வி நிலையத்திற்கு உண்டு.


  சில பேர் முதல் நாள் வகுப்புக்கு புதிய உடை வாங்கி அலமாரியில் வைத்திருந்தனர். அதில்  தம்முடைய வாழ்க்கை பயணத்தின் கனவை அந்த மொழுகி காவல் காத்தனர்.
எனக்கெல்லாம்  கல்லூரிக்கு முதல் நாள் தூக்கமே வரவில்லை.

  முதல் நாள் எப்படி இருக்குமோ? நண்பர்கள் கிடைப்பார்களா? எப்படி படிப்பது? எப்படி நடந்து கொள்வது? ஆசிரியர்கள் எப்படி இருப்பார்கள்? மனம் குழப்பத்தில் தவித்தது.


  போதாத குறைக்கு பம்மல், மீனாட்சி கிருஷ்ணன் பாலிடெக்னில் படித்த என் நண்பன் வேறு ஒரு திரைக்கதையை ஓட்டினான்.

“ டே மாப்ள.. எங்க சயின்ஸ் சாரு ஒரு கேள்விய கேப்பாரு..

 கேட்டு பதில் வரலைன்னு வச்சுக்க…..
 நிக்க வச்சு நாக்க புடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேப்பார்றா” என்றான்.

நான் அப்பாவியாக
 ”டேய்  அடிக்கமாட்டிரில்ல..? என்றேன்

”அடிச்சுட்டா கூட பரவாயில்லடா…

பொம்பள புள்ளைங்க முன்னாடி அசிங்க அசிங்கமா கேப்பார்ரா..
அதுக்கு நாலு அடிகூட வாங்கிக்கலாம்…”

இத பார்த்த Girls  எல்லாம்,
அதுங்க என்னமோ தாமஸ் ஆல்வா எடிசன் பொண்ணுங்க மாதிரி ’கெக்க பிக்க கெக்க பிக்கன்னு சிரிக்கும் மாப்ள..

 அவமானம் அவமானமா இருக்கும்டா” என்றான்.

அவன் சொன்ன விஷயம் சிரிப்பு வந்தாலும் ஒரு புதிய இடத்திற்கு போய் சங்கமிக்கும்  நடுக்கம் வரத்தான் செய்தது.
நாளை முதல் நாள் வகுப்பு.. என்ன நடக்கும் என்ற கேள்வி மனதை குடைந்தது. கடும் புயலில் பறந்து வந்து வேலியில் சிக்கிய பாலீத்தீன் பையாய் ’பட பட’ வென மனம் சல சலத்தது.

 அது ஒரு மாதிரியான மனநிலை மணப்பெண் புது வீட்டிற்கு போவது போல…

இருப்பதிலேயே சுமாரான சட்டையும் பேன்டையும் எடுத்து வைத்துவிட்டேன்.

   ஏற்கனவே கோத்தாரியில் மோகன வெங்கடேசன் என்ற எங்க ஊரு பையன் இரண்டாம் ஆண்டு படித்தான்.

"உன்ன யாராவது ரேக்கிங்க பண்ணா எங்கிட்ட சொல்லு…. இல்லைன்னா என்னோட பேர சொல்லு"ன்னு ரஜினி ஸ்டைலில் சொன்னான்.
அடப்பாவிங்களா… இதுல ரேக்கிங் வேறையா? கிழிஞ்சது போ..

வீட்டை விட்டு வெளியில் வந்தேன். அப்பா அதிகமாக ஒன்றும் சொல்லவில்லை.  "பசங்ககிட்ட பார்த்து பழகுடா"ன்னார் அவ்வளவுதான்.

அம்மா வலுக்காட்டயமாக விபூதி வைத்தாள்.  தெருமுனை திரும்புவதற்குள் துடைத்துவிட்டேன். (அப்பவே நான் அப்புடிதான்)  நாம  என்ன போருக்கா போறோம். …

 # சிவ. தினகரன் CMKT
… தொடரும்..

கோதாரி நினைவுகள் – 3

கோதாரி நினைவுகள் – 3


முட்டி மோதி ஜெயிப்பதற்கு  சந்திரசேகருக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு போட்டியா நடக்கிறது.

 ஆனால்  என்னைவிட அதிகமான மதிப்பெண்களை சந்திரசேகர் பெற்றிருந்தான்.

பல நம்பிக்கையோடு திருநீரும் பொட்டுமாக சந்திர சேகர் வந்திருந்தான். அவனுக்கு  MTMR  படிப்பு உறுதியானது.


அடுத்தது…

எங்கள்முறை. ..
 பௌன்டரி பற்றி பாலசுப்பிரமணி சார் ஆகா.. ஓகோ.. வென பேசிய பேச்சிகளின் மூலம் அப்பா கொஞ்சம் இறங்கிவந்தார்.

மெட்டல் சயின்ஸ், மெட்டிரியல் சயின்ஸ்,  டை காஸ்டிங்க்.. பௌன்டரி படிச்சவன் ஒருத்தன் கூட வேலையில்லாம வீட்ல இல்ல.. கைநிறைய சம்பாதிக்கிறாங்க தெரியுமா சார்… என ஏதேதோ சொல்ல.. சொல்ல.. உருகினார் அப்பா.

 ‘ கைகளில் இருந்த சேமிப்பு 10 ஆயிரம் பணத்திற்கு அந்த படிப்பே என எமக்கு எழுதியும் வைத்திருந்தது.

அப்பா பணிபுரிந்த ஊரக வளர்ச்சித்துறை மூலம் அங்கே certificate  கோர்சும் நடைபெற்று வந்ததால்,  அவரது அரசுத்துறைக்கும் கோத்தாரி கல்விநிலையத்திற்கும் இருந்த இணைப்பு மூலம் எப்படியோ எனக்கான பட்டயப் படிப்பின் சேர்க்கை உறுதி செய்யப் பட்டது.


அன்று மாலை…


மாலை நண்பர்கள் கூட்டத்தில் பேசும் போது சொன்னேன். ”டேய் பௌன்டரி டெக்னாலஜி சேரப்போறேன்டா”

டே.. அப்படின்னா என்னடா..

”டேய் அது ஃபௌண்டேஷன் டா..

 சிவில் கோர்சுல அடித்தளம் அமைக்கிறது பத்தி தனியான கோர்ஸ் போல..” என்றான்

மற்றொரு நண்பன்
அதை மறுத்து அவனது அண்ணன் ஒருவன் சொன்னான்..
 பௌண்டரின்னா பண்ணைன்னு அர்த்தம். ஆடு, மாடு, கோழி, பன்றி வளர்க்கிற இடத்தைத்தான் ஃபௌன்டரின்னு சொல்லுவாங்க.
அனேகமா அத பத்திதான் படிக்கிறது. என்றான் விவரமாக…

என்னவென்று தெரியாத ஒரு படிப்பை படிப்பதா? என்ற கவலை மிகுதியாக இருந்தது.

ஆனால் எப்போதும் தனித்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதும் என்னுள்ளே இருந்தது. யாரும் படிக்காத படிப்பை நாம் படிக்க வேண்டும் என்ற மேதமையும் இருந்தது.


சுகுமாரன் தமது கவிதைகளில் சொல்லுவார்
”தன்னார்வ சமூகத்தில்
தனித்துவம் காட்ட
காண்டா மிருக கொம்பு காட்டு”
நானும் காண்டாமிருக கொண்பு காட்ட முனைந்தேன்.

சிறப்பான ஒரு படிப்பை படிக்கப்போவதாக உறவினருக்கெல்லாம் கடிதம் போட்டேன்.  உடன் +2 படித்த நண்பர் மத்தியிலெல்லாம் காலரை இழுத்துவிட்டு டம்பம் காட்டினேன்.  பெயருக்கு பின்பாக D.F.Tech.,  இருக்கப்போவதை நினைத்து நினைத்து புலங்காகிதம் அடைந்தேன்.

சாதாரண டிப்ளமாவுக்கு இவ்வளவு பில்டப்பா?


ஆமாம்..
ஆம்ஸ்டாங்குக்கும் அப்துல் கலாமுக்கு மட்டுமா கனவு சொந்தம்…

அமிர்தராஜூவுக்கும்  ஆர்.எம் அருணுக்கும் தினகரனுக்கும் கூட கனவின் எஜமானர்கள்தானே..


”ஆசைகள் இங்கே குதிரைகள் ஆனால் ஏழைகள் கூட ஊர்வலம் போவார் ”
பெங்களூர் நெடுஞ்சாலையின் ஓரம் இருந்து கல்வி நிலையத்திலிருந்து என் கனவு ஓரிரு வாரத்தில் தொடர்ப்போகிறது...

 என்னைப்போலவே கனவின் எஜமானர்கள் ஒன்று கூடினார்கள்.  கல்லூரி முதல்நாள் வகுப்பை யார்தான் மறக்க முடியும்?...

அப்படி என்னதான் நடந்தது..

காத்திருங்கள்... # சிவ. தினகரன் CMKTI

கோத்தாரி நினைவுகள் -2

கோத்தாரி அனுபவங்கள் பகுதி 2

மறுநாள்..
குதிரைக்கொம்பு…?

பிரின்சிபால் அறைக்குள் இருந்து வெள்ளை சட்டை மடிப்பு களையாமல் வெளியில் வந்தார் பால சுப்பிரமணி  சார்….

அவர்தான் கோத்தாரி  பாலிடெக்னிக் மேலாளர்.

 சார்.. 375 ஆ.. சான்சே இல்லை சார். இந்த மார்க்குக்கு சத்தியமா DMTMR லாம் கிடைக்கவே கிடைக்காது.

பௌன்டரி.. சேக்கிறீங்களா சொல்லுங்க…

இல்லைனா.. சிவில்

அவர் சிவில்,,, சிவில்… என சொல்லி எங்க DMTMR கனவின் செவுலில் அடித்தார்.

மேலும் முனியாண்டி விலாஸ் விலைப்பட்டியல் போல ரேட்டையும் சொன்னார்.

DMTMR – 40 ஆயிரம்

FOUNDRY – 30  ஆயிரம்

CIVIL – 20 ஆயிரம்.

RTO வை பார்த்த ஆட்டோகாரன் போல அப்பா திரு.. திரு.. வென விழிக்க ஆரம்பித்துவிட்டார்.

என்னிடம் திரும்பி.. “டேய் என்னடா என்றார்?”

எப்பவுமே தமிழனுக்கு விலை அதிகமானதுதான ஒசத்தி.

சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாக DMTMR  என்றேன்.

அப்பா வேதாளமாக மீண்டும் பாலசுப்பிரமணி தோளில் ஏறினார்.

அந்த வரண்டாவில்  “ சந்துலால் கோத்தாரி”  மற்றும் “மோதிலால் கோத்தாரி” என்ற இரண்டு சேட்டுகள் படம் மாட்டிய சட்டங்களுக்குள் இருந்து சிரித்தனர்.

தமிழகத்தில் சேட்டுகள் போடுவதுதானே சட்டம். .  பல  மதுபான நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் தயாரித்த கெமிக்கல் கம்பெனி ஓனர் கோத்தாரிகளின் படம் அது.

அவர்கள் நடத்தும் அறக்கட்டளை உதவியுடன்தான் இந்த  கல்வி நிறுவனம் இயங்குகிறது என்பதை அறிந்தேன்.

ஓ… அப்போ இந்த கோத்தாரிதான் “படிக்கவும் வைக்கிறார், குடிக்கவும் வைக்கிறாரா?” என்ற தெளிவு பிறந்தது.

 விண்ணப்பம் வாங்கி சேர்க்கை நடைபெறும் அந்த காலகட்டத்தில் அப்படி ஒன்றும் சட்டம் ஒழுங்கு சல்லிசாக இல்லை.

 ஜெ. காவிரிப் பிரச்சனைக்காக கடற்கரை சாலையில் உண்ணாவிரதம் இருக்க … வந்தது பிரச்சினை.

 அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு   ஏனோ தானோ என ஓடிக்கொண்டிருந்த ஒற்றைப் பேருந்து கலைவாணியும் ஓரங்கட்டப் பட்டு இருந்தது.


மிக அழகாக கல்வி நிலையங்களை வடிவமைத்த அந்த கோத்தாரி தலைமுறைக்கு நன்றியை சொல்லியே ஆகவேண்டும்.

ஓயாமல் வீசும் காற்று,

 கண்கள் நிறைந்த பசுமை,

ஒவ்வொரு சிமென்ட் திட்டுக்கும் குடை பிடித்த மரங்கள்,

கடல் போல் எப்போதும் காட்சி அளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டிய பகுதி என ரம்யமாக இருந்தது.

காற்று வந்து அமைதி கெடுத்தாலும் பாப்பாஞ்சத்திரம் நோக்கி செல்லும்  சரக்கு லாரியின் டயர் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

முக்கியமாக கோத்தாரி அலுவலக முதன்மை கட்டிடத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும். கோத்தாரிக்கு வருவோருக்கு விண்ணப்பம் கிடைக்கிறதோ, சீட் கிடைக்கிறதோ இல்லையோ.

அங்கே வருவோருக்கு நிச்சயமாக “குளிர்ந்த குடிநீர்” கிடைக்கும்.  Post Diploma  மாணவர்கள் கைங்கரியத்தில் அங்கே குளிர் பதன சாதனம் இயங்கும்.  எந்த வாத்தியார் திட்டினாலும் கோத்தாரி மாணவர்களுக்கு அந்த “சில்” வாட்டர் ஆறுதல் அளித்துக் கொண்டே இருந்தது.

அப்பா எப்படியாவது சீட் வாங்கிவிடவேண்டும் என முனைப்பாக இருந்தார்.
சார் நான் Rural Welfare Officer  ஆக BDO officeல் வேலை செய்கிறேன். என்று தமது பதவியை சொல்லி கேட்டுப்பார்த்தார்.

அதற்கு பதில் … ”அதோ.. BDO  ஓவே வந்திருக்கார் பாருங்க.. அவருக்கும் அதே பதில்தான்”
விரல் நீட்டிய திசை நோக்கிப் பார்க்கிறேன்.

நம்ம ரியாஸ் அகமதுவுக்கு  Recomatation லெட்டரோடு  பூந்தமல்லி BDO நிற்கிறார்.

“சாமியே சைக்கிள்ள போகுது.. பூசாரி புல்லட் கேட்கிறாரு என்கிற கதையாக கண்ணாடி அணிந்திருந்த பாலசுப்பிரமணியம் சார் தமது பெக்ஸ்சை தாண்டி மீண்டும் எங்களைப் பார்த்தார்.


உண்மைய சொல்லி ஒரு சீட் வாங்க எங்கப்பா என்ன மாணிக் பாஷாவா?  ம்… எவ்வளவு பேசியும் ஒண்ணும் நடக்கல.  நாட்கள் நகர்ந்தன.

இப்போதும் புங்க மரத்தடியில்  போட்டியில் இருப்பது இருவர்தான். ஒன்னு நானு மற்றொன்று பாரிவாக்கம் சந்திரசேகர்.

சந்திரசேகர் அப்பாவை பார்க்கும் போது திட்டவட்டமாக எப்படியும் தன் மகனுக்கு சீட் வாங்கிவிடுவார் என தெரிந்தது எங்கள் மனதில் இன்னும் கிலியேற்றியது.

யாரு  எப்படி முட்டி மோதி ஜெயிச்சோம்னு  நினைக்கிறீங்க.. ..

நெனச்சுகிட்டே இருங்க… வரேன்..
(தொடரும்….) # சிவதி CMKTI

கோத்தாரி நினைவுகள் பாகம் 1

கோத்தாரி அனுபவங்கள் …. பகுதி 1

சென்னை பெங்களூர் சாலை அப்போதெல்லாம் அது நான்குவழிச்சாலை அல்ல..  இவ்வளவு அகலம் அல்ல. ஆனால் அழகாக இருக்கும்.  இரு புரமும் புளியமரங்கள்  சாமரம் வீசி சாலையின் பக்கவாட்டு எல்லைகளை காட்டும்.  நெடுஞ்சாலைகள் தானே இந்தியாவின் நாடி நரம்பு.  இதில் முக்கிய நரம்பு இந்த சாலை.  எப்போதும் போக்குவரத்து இருக்கும் ஆனால் போக்குவரத்து  நெரிசல் (Traffic) இருக்காது. இருந்த போதும் போதும் பரபரப்பான சாலை அது.  பூவிருந்தவல்லியில் இருந்து 6கிமீ தொலைவில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் கிராமத்தில் அமைந்திருந்தது கோத்தாரி பாலிடெக்னிக்.

அடியேன் + 2 முடித்த கையோடு அங்கு வந்து விண்ணப்பம் பெற வந்தேன்.  SSLC மற்றும் +2 முடித்தவுடன் பலபேரின் கனவுகளை நம் மூளை சுமப்பதாலோ என்னவோ தெரியவில்லை பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டது போல தலை கொஞ்சம் கனமாகவே இருக்கும்.

”மூண்றரையாண்டு படிப்பு,
சான்ட்விட்ச்,

இது ரெகுலர் டிப்லமா அல்ல.

படிக்கும் போதே வேலை…
இல்லை இல்லை படித்து முடித்த உடனே வேலை”

 என்ற  விண்மண்டலத்தில் இருந்து உதிர்ந்த சொற்கள் என் அப்பாவின் காதில் விழுந்தது.
 என் அப்பாவும் “ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது…..” என கனவுலகில் மிதலக்கானார்.

அதன் விளைவு நானிப்போது செம்பரம்பாக்கம் செல்லும் கலைவாணிப் பேருந்தில் கடைசி இருக்கையின் அருகில் ஒரு கைகூட பிடிக்க இயலாத கூட்டத்தில் நின்று செம்பரம் பாக்கம் சென்று கொண்டு இருக்கிறேன் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?
வாஸ்கோடகாமா இந்தியாவை கண்டறிவதறுகு எடுத்துக்கொண்ட பயண முயற்சிக்கு இணையானது பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம் வருவது.  இருந்தாலுமென்ன
“அட சத்தியமா படிக்கும்போதே வேலைங்க… படிச்சு முடிச்ச உடனே சத்தியமா வேலைங்க… ” என்ற அசரிரி காதில் ஒலிக்க எப்படியோ வந்து சேர்ந்தேன்.

கோத்தாரி என்ற பெயரை அப்போதெல்லாம் ‘பான்பராக் ‘ பாக்கெட்டின் பின்புறம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

 “பான்பராக் கம்பெனி காரங்க எப்படி படிப்பு சொல்லித்தருவாங்க?” என்று மண்டைக்குள் புழு நெளிய.. விடை தேடி கோத்தாரிக்குள் நுழைந்தேன்.
 அப்ளிகேஷன் வாங்கிவிட்டு ஒரு புங்க மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறேன்.

கையில்  Drafter  உடன் அங்கே படிக்கும் மாணவர்கள், நான் கையில் விண்ணப்பத்துடன் பார்த்த போது … சமையல் கட்டில் கரப்பான் பூச்சியை பார்ப்பது போல பார்த்துவிட்டு நகர்ந்தனர்.
நமக்கெல்லாம் உடனே வேலை கெடக்கப்போகுதுன்ற பொறாமையிலதான் அப்படி பாக்குறாங்க என்ற கருத்தில் மாற்று
 இருந்தேன். …

அப்போதெல்லாம் பாலிடெக்னிகில் சீட் கிடைப்பது குதிரைக்கொம்பு… குதிரைக்கு கொம்பு முளைத்ததா… அடுத்த பகுதியில்..

…. தொடரும்..

# சிவதி CMKTI

Newer Posts Older Posts Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments